நுண்ணீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு மத்திய அரசின் மானியம் பெறலாம்

தஞ்சை, நவ. 2: நுண்ணீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், மத்திய அரசின் மானியம் பெற விண்ணப்பிக்க கலெக்டர் அண்ணாதுரை அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள் குழாய் கிணறு, துளை கிணறு, ஆயில் இன்ஜின், மின் மோட்டார், நீர்பாசன குழாய், தரைநிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட நீர்பாசன முறைகளை அமைப்பதற்கான மானியம் பெற விண்ணப்பம் செய்யலாம். நீர்பாசன வசதியில்லாத இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு பிரதம மந்திரியின் விவசாய நீர்பாசன திட்டத்தின்கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் “ஒரு துளி நீரில் அதிக பயிர்” எனும் திட்டத்தில் 2018-19ம் ஆண்டுக்கு முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.1.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள குறுவட்டங்களில் குழாய் கிணறு அல்லது துளை கிணறு அமைப்பதற்கு அதிகபட்ச மானியமாக ரூ.25 ஆயிரம், ஆயில் இன்ஜின் அல்லது மின்மோட்டார் அமைப்பதற்கு அதிகபட்ச மானியமாக ரூ.15 ஆயிரம், நீர்பாசன குழாய்கள் அமைப்பதற்கு அதிகபட்ச மானியமாக எக்டேருக்கு ரூ.10 ஆயிரம், தரைநிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அதிகபட்ச மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்துறை, வேளாண் பொறியியல்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். “ஒரு துளி நீரில் அதிக பயிர்” எனும் திட்டத்தில் முதற்கட்டமாக தஞ்சை மாவட்டத்துக்கு ரூ.1.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: