டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கண்காணிக்க தவறிய கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

தஞ்சை, நவ.2:  டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை கண்காணிக்க தவறிய தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சை மணிமண்டபம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேற்று காலை டிஆர்ஓ., சக்திவேல் தலைமையில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வளாகத்தில் கிடந்த கட்டுமானத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பழைய டயர்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா, தேங்கிய தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் இருக்கிறதா என டிஆர்ஓ., சக்திவேல் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அப்பகுதியில் கிடந்த பழைய டயரில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

 இதையடுத்து டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த பழைய டயர்கள், கட்டுமான உபகரணங்களில் தேங்கியிருந்த தண்ணீரை கண்காணித்து அப்புறப்படுத்த தவறிய தனியார் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து டிஆர்ஓ., சக்திவேல் உத்தரவிட்டார்.

பின்னர் அபராத தொகையை நகர்நல அலுவலர் நமச்சிவாயம் வசூல் செய்தார். ஆய்வின்போது ஆர்டிஓ சுரேஷ், தாசில்தார் அருணகிரி, மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, நகர்நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Related Stories: