தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை

தஞ்சை, நவ.2: தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை நேற்று  துவங்கும் என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் மேகமூட்டத்துடன் வானிலை காணப்பட்டது. பிறகு மதியம் முதல் பரவலாக மழை பெய்தது.

பருவமழை துவங்கியதையடுத்து தொடர்ந்து மழை இருக்கும் என வானிலை நிலையம் அறிவித்துள்ளதால் தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இம்மழையானது சம்பா பயிர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் தூரல் மழையாக தொடங்கி லேசான மழை பெய்தது. இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் கும்பகோணம் ஆயிகுளம் ரோடு, பொற்றாமரை குளம், நாகேஸ்வரர் கோயில் வடக்கு வீதி, கும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சாலையின் ஓரத்தில் போடப்பட்டுள்ள தரைக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

காலை முதல் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடைபிடித்தபடி சென்றனர். இதேபோல் அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால், தற்போது  பெய்து வரும் மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிக்கு இந்த மழை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இன்னும் ஓரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: