வணிகர்கள் பங்களிப்பு தொகையுடன் கட்டப்பட்டது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திறக்கப்பட்ட பழக்கடைகள்

மதுரை, நவ.1:  வணிகர்களின் பங்களிப்பு தொகையுடன் கட்டப்பட்ட பழக்கடைகளை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்து மாநகராட்சி திறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிம்மக்கல், யானைக்கல், கீழமாரட்வீதி உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் பழக்கடைகள் வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாட்டுத்தாவணியில் 4.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பில் 240 பழக்கடைகள் கட்ட கடந்த 2016 மே மாதம் பூமிபூஜை போடப்பட்டது. ஏற்கனவே பழ மொத்த வியாபார சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வணிகர்களின் பங்களிப்பு தொகையாக ரூ.12 கோடி எனக்கூறி,  மாநகராட்சி ரூ.27 கோடியை பெற்றுள்ளது. இதை வைத்து குடிநீர், சாலை, வடிகால் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி அறிவித்தது. இந்நிலையில் பழக்கடைகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திடீரென மதுரை மாநகராட்சி சேர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேற்று திறந்து வைத்தார்.

பழ வியாபாரிகள் கூறுகையில், ‘‘மத்திய அரசு ரூ.100 கோடி, மாநில அரசு ரூ.100 கோடி என ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.1000 கோடி நிதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டிக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால், மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், நான்கு வெளிவீதிகள், நான்கு மாசிவீதிகள், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் என 1000 ஏக்கர் பரப்பளவு பகுதிகளில் மட்டுமே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. இந்த 1000 ஏக்கருக்கு அப்பால் விதிமுறையை மீறி பழக்கடைகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சி எப்படி சேர்த்தது என தெரியவில்லை. இதற்கான செலவு எவ்வளவு என கேட்டால் மாநகராட்சி அதிகாரிகள் வாய்திறக்க மறுக்கின்றனர்.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கட்டப்படும் எந்த ஒரு கட்டுமானமும் ஹைடெக்காக சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். ஆனால் பழக்கடைகளில் ஒரு ஹைடெக்கையும் பார்க்க முடியவில்லை. ஸ்மார்ட் சிட்டி என்ற போர்டு மட்டுமே அலங்காரமாக வைத்திருக்கின்றனர்’’ என தெரிவித்தனர்.

எப்படி இருக்க வேண்டும்? ஸ்மார்ட் சிட்டி பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் சீராக விநியோகம் செய்வது, மழைநீர் சேமிப்பு திட்டத்தை மேம்படுத்துவது, சூரிய சக்தி மூலமாக மின்சாரம் பெறுவது உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும். ஆனால் இத்தனை வசதிகளும் தற்போது திறக்கப்பட்ட பழ மார்க்கெட் பகுதியில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Related Stories: