சத்துணவு ஊழியர்கள் 400 பேர் கைது

மதுரை, நவ. 1:  ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் கருப்பு ஆடை அணிந்து வந்து மறியலில் ஈடுபட்ட 400 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலைமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு சட்டபூர்வ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். உணவு மானியத்தை ஒரு குழந்தைக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் தொடர் ேபாராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அமைச்சர் சரோஜா, செயலாளர் மணிவாசகன் ஆகியோர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள 1,440 சத்துணவு மையங்களை மூடிய ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணியை புறக்கணித்தனர். கருப்பு ஆடை அணிந்த அவர்கள் அனைவரும் அண்ணா பஸ்ஸ்டாண்டு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் திரண்டனர். அங்கிருந்து, மாவட்ட செயலாளர் சோலையன் தலைமையில் அனைவரும் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். அலுவலக வாசல் கதவு பூட்டப்பட்டு போலீசார் தடுப்பு அரண் போல் நின்றிருந்தனர். இதனால், அவர்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி கோஷம் போட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சோலையன் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

Related Stories: