7 ஆண்டாக மனு கொடுத்தும் பலனில்லை ஓய்வூதியம் வழங்காமல் மூதாட்டிைய அலைக்கழிப்பு

சேலம், அக்.18:ஓய்வூதியம் வழங்காமல் 7 ஆண்டுகளாக அலைகழித்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மூதாட்டி மனு அளித்துள்ளார்.

மேட்டுப்பட்டி காலனியை சேர்ந்தவர் பழனியம்மாள் (74). நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த இவர், அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பட்டி காலனி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் சமையலராக இருந்து, கடந்த 2003ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். கடந்த 2009ம் ஆண்டு, சத்துணவு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து எனக்கு ஓய்வூதியம் வழங்கும்படி அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தேன். பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 7 வருடமாக இதற்காக அலைந்து வருகிறேன். ஓய்வூதியம் வழங்க கலெக்டர் மற்றும் அவரது நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர் அறிவுறுத்தியும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.18: சேலத்தில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துைற அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில், மாநில பிரச்சாரக்குழு செயலாளர் சுகமதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். 500 ரேசன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட பொருளாளர் சுந்தரம், துணை தலைவர் குமார், துணை செயலாளர்கள் ராஜீ, சவுந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: