×

ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

இடைப்பாடி, அக்.18: இடைப்பாடி நகராட்சியில் 1வது வார்டுக்குட்பட்ட மோட்டூர் அச்சம்பட்டி ஏரியில், பொக்லைன் கொண்டு தினசரி 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் மண் அள்ளப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் முன்னாள் கவுன்சிலர் அழகேசன் தலைமையில் திரண்ட 100க்கும் மேற்பட்டோர், ஏரியில் மண் அள்ளிக்கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். மேலும், மண் ஏற்றிச்சென்ற டிராக்டரை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக மண்ணை தோண்டி எடுத்துச்செல்வதால், மழை பெய்தாலும் தண்ணீர் தேங்குவதில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பொய்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மண் அள்ளிச்செல்வதை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து விதி மீறி மண் அள்ளினால், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து, தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, முறைப்படி அனுமதி பெற்றே மண் அள்ளுவதாக தெரிவித்தனர். ஆனால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் அள்ளிச்செல்வது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கேசவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மோட்டூர் கிராம மக்கள் மற்றும் எஸ்.ஐ. வெங்கடாசலம், ஆர்ஐ பிரபு, விஏஓ சங்கிலிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஏரியில் மண் அள்ள கட்டுப்பாடு விதிக்கப்படும். ஏரியில் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி, கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்படும் என தாசில்தார் கேசவன் தெரிவித்தார்.

Tags : lake ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...