×

மதுக்கடை திறக்க கடும் எதிர்ப்பு டாஸ்மாக் மேலாளர் வீட்டை முற்றுகையிட திட்டம்

மேட்டூர், அக்.18: மேட்டூரில் உள்ள ரயில் நிலையத்திற்கு இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மேட்டூரிலிருந்து சேலம் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரும், அலுவலகங்களுக்கு செல்வோரும் சீசன் டிக்கெட்டு எடுத்து மிகுந்த பயனடைந்து வந்தனர்.
 இதையடுத்து, மேட்டூரிலிருந்து சென்னை செல்ல ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டன. இந்த ரயில் வசதி இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. குழந்தைகளுடன் சென்னை செல்வோரும், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரக்கூடிய நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதியாக இருந்து வந்தது.
இந்நிலையில், இப்பகுதியில் இருந்து இயக்க கூடிய பஸ்களில் வசூல் குறைந்ததால், பயணிகள் ரயிலை நிறுத்துவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களது செல்வாக்கை பயன்படுத்தி சரியான நேரத்திற்கு வரும் பயணிகள் ரயிலை நேரம் மாற்றி இயக்கிட நடவடிக்கை எடுத்தனர். மேலும், சென்னை செல்லும் பயணிகள் ரயில் பெட்டியும் சேலத்துடன் நிறுத்தப்பட்டது. தற்போது, பயணிகள் ரயிலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் ரயில் நிலையத்தையொட்டி மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சித்து வருகிறது. ரயில் நிலையத்திற்கு பயணிகள் செல்லும் பாதையில் கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் பெண்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பெண்கள் அச்சத்திற்குள்ளாகும் நிலை ஏற்படும். இதனால், ரயில் நிலையத்திற்கு வந்து பயணத்தை தவிர்க்கும் வேளையில் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், சேலம்-மேட்டூர் பயணிகள் ரயிலை நிறுத்தக்கூடிய கட்டாயம் ஏற்படும். எனவே, இப்பகுதியில் மதுக்கடை திறக்கும் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். கடும் எதிர்ப்பையும் மீறி திறந்ததால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
சமூக ஆர்வலரும், சேலம் மாவட்ட மக்கள் நலச்சங்க நிறுவனருமான பாரதி கூறுகையில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயிலை நிறுத்த சில பேருந்து உரிமையாளர்கள் முயற்ச்சித்து வந்தனர். தற்போது, டாஸ்மாக் நிர்வாகமே அந்த வேலையை செய்கிறது. ரயில் நிலையம் செல்லும் பாதையில் மதுக்கடை அமைத்தால் பொதுமக்களை திரட்டி டாஸ்மாக் மேலாளர் வீட்டை முற்றுகையிடுவோம் என்றார்.

Tags : manager ,bartender ,house ,
× RELATED காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள...