மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

சேலம், அக்.18:சேலம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்களை சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்தார். இதில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரகுநந்தனன், மாநில தொற்றுநோய் கண்காணிப்பு அலுவலர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, நோய்தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பேசினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:எச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் காற்றின் மூலம் பரவக்கூடியது. பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 24 அதிவிரைவு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் செயல்படும் தனி சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்து மாத்திரைகள், டாமிப்புளு மற்றும் சுயபாதுகாப்பு சாதனங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருப்பின், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதுடன், அதிக அளவு திரவ உணவை உட்கொள்ள வேண்டும். மேலும், அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் ரத்த கொதிப்பு அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கு இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், உடனடியாக சுகாதார பணிகள் துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்க, தனியார் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைகால தொற்று நோய்களான டெங்கு, சிக்குன்குனியா மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க, பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், அரசு மருத்துவமனை டீன் ராஜேந்திரன், இணை இயக்குநர் நலப்பணிகள் (பொ) சத்யா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, தொழுநோய் துணை இயக்குநர் குமுதா, மாநகர நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: