×

நயினார்கோவில் யூனியனில் குழாய் உடைந்து வீணாகும் காவிரி நீர் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி

ராமநாதபுரம், அக்.18: நயினார்கோவில் யூனியனில் உள்ள ஊராட்சிகளில் குழாய் உடைக்கப்பட்டு காவிரி குடிநீர் பல இடங்களில் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு ராட்சத சிமென்ட் குழாய்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர்  சப்ளை செய்யப்படுகிறது.  குடிநீர் சீராக சப்ளை செய்ய கிராம பகுதியில் குடிநீர் டேங்குகள் அமைக்கப்பட்டு அதில் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன.  குழாய்களில் குடிநீர் வரும்போது பல இடங்களில் வால்வுகள், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக்கப்படுகிறது. நயினார்கோவில் யூனியனில் உள்ள பி.கொடிகுளத்திலிருந்து நயினார்கோவில் செல்லும் சாலையோரத்தில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து அருகில் உள்ள  வயல், ஊரணிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் குடிநீர் வாரிய  அதிகாரிகள்  கண்டு கொள்வது கிடையாது.  ஏற்கனவே காவிரி குடிநீர் பற்றாக்குறையால் நகர், கிராம
பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து கொடிகுளத்தை சேர்ந்த முருகன் கூறுகையில், ‘‘கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் வருவது கிடையாது. பல மாதங்களாக குடிநீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகிறோம். குடிநீர் தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. வேறு வழியில்லாமல் சாலையோரத்தில் தேங்கும் நீரை குடித்து வருகிறோம். குடிநீர் கலங்களாகவும், அசுத்தமாகவும் உள்ளதால் தொற்றும்நோய் பரவி வருகிறது. இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். குடிநீர் பிரச்னை காரணமாக சில பல இடங்களில் பொதுமக்களே குழாயை உடைத்து தண்ணீர் எடுக்கின்றனர்.

முறையாக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் வராது’’ என்றார். குழாய் உடைத்தால் கடும் நடவடிக்கை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் கிராமங்களில் பலர் தங்கள் தேவைக்கு குடிநீர் குழாய்களை உடைத்து வயல், ஊரணிகளுக்கு நீரை கொண்டு செல்கின்றனர். இதனால் முறையாக கிடைக்க வேண்டிய குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை.  ஒரு சிலர் டேங்கின் அருகிலேயே குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற செயல்களை செய்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது. குழாயை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : Nainagarco Union ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை