×

ஆர்எஸ்.மங்கலம் கடைகளில் விநியோகம் ரேஷன் அரிசி ரொம்ப மோசமா இருக்கு... ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதம்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.18: ஆர்எஸ்.மங்கலத்தில் ரேஷன் கடைகளில் மோசமான அரிசியை வழங்கியதால், ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போனது. எனவே பெரும்பாலான மக்கள் ரேஷன் அரிசியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். நேற்று திருப்பாலைக்குடி,  உப்பூர், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்தனர். தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் ஆவலுடன் கடைகளுக்கு வந்து அரிசி வாங்கினர். ஆனால் அரிசியை வாங்கி பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அரிசி மிகவும் மோசமாக பழுப்பு, சாம்பல், கருப்பு போன்ற நிறங்களில் இருந்தது. இதனால் இந்த அரிசியை எப்படி சாப்பிடுவது எனக் கூறி பொதுக்கள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திருப்பாலைக்குடியை  சேர்ந்த காதர் கூறுகையில், ‘‘எங்கள் ஊரில் உள்ள ரேஷன் கடையில் இந்த மாதம்  போடும் அரிசி மக்கள் சாப்பிடவே தகுதியற்ற நிலையில் உள்ளது. மழைக்காலம்  மற்றும் பண்டிகை காலங்களில் இப்படி ஒரு சுகாதாரமற்ற அரிசியை அரசே  வழங்கினால் பொதுமக்களின் சுகாதாரம் எப்படி இருக்கும்? பல வகைகளில் சுகாதார  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் அரசு மக்களுக்கு தரமான அரிசியை வினியோகம்  செய்யாதது மிகவும் வருத்தமாக உள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமும்  கேள்விக் குறியாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம்  தரமான அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். ரேசன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் என்ன செய்ய முடியும்? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து இந்த அரிசிதான் சப் சென்டருக்கு வருகின்றது. அங்கிருந்து எங்களது கடைகளுக்கு வருகின்றது. அந்த அரிசியைதான் நாங்கள் போடுகின்றோம்’’ என்றனர்.

Tags : RS ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...