×

சரஸ்வதி, ஆயுத பூஜையையொட்டி பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகம் பூக்கள் விலை ‘கிடுகிடு’மாநகர் வீதிகள் களைகட்டியது

மதுரை, அக். 18: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி, பூ, பழமார்க்கெட், மதுரை மாநகர் முக்கிய கடைவீதிகளில் பூஜைப்பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது. பூஜைப்பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகம் வந்தது. ஆயுத பூஜையையொட்டி, வீடுகள், மற்றும் தொழில் நிறுவனங்களில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி, வண்ண மலர்களால் அலங்கரித்து, சுவாமிக்கு பொறி,கடலை, பழங்கள் படைத்து வழிபடுவது வழக்கம். திருஷ்டிக்காக, வெள்ளை பூசணியை வீடுகள், தொழில் நிறுவனங்கள் முன்பு உடைப்பர். இதற்காக, மாநகர் பகுதிகளின் சாலையோரங்களில் வெள்ளைபூசணி, சாம்பல் பூசணி அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறு வாழைக்க கன்றுகள், மரங்கள் அதிகளவில் கொண்டுவரப்பட்டு ஜோடி ரூ.50லிருந்து ரூ.200வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பூஜையில்  முக்கிய இடம்பிடிக்கும் பொரி, கடலை, வெல்லம் உள்ளிட்ட பூஜைப்பொருட்களின் விலையும் சற்றே உயர்ந்து விற்பனையானாலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், சிம்மக்கல் பழ மார்க்கெட்டில் பூ மற்றும் பழங்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால், மாநகர் வீதிகள் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயுத பூஜையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனையானது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை சுற்றுவட்டார பகுதிகளில்  இருந்தும், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இருந்தும் பூக்கள் கொண்டுவரப்படுகிறது. நவராத்திரி விழா துவங்கியதில்  இருந்து பூக்கள் விலை சற்றே உயர்ந்து விற்பனையானது. இந்நிலையில்,  ஆயுதபூஜையையொட்டி, மேலும் விலை உயர்ந்தது. கடந்த  வாரம் கிலோ ரூ.500க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.800க்கு விற்பனையானது.  இதேபோல், கிலோ ரூ.500க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1000க்கு விற்பனையானது. பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது,  ‘‘மார்க்கெட்டில், மல்லி, முல்லை, கனகாம்பரம் வரத்து குறைவாகவே உள்ளது. இந்நிலையில், இம்மாதத்தில், தற்போது அடுத்தடுத்த தொடர் விசேஷ தினங்களால்  பூக்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது’’ என்றார். பூக்கள் விலை நிலவரம்  கிலோ கணக்கில்: கனகாம்பரம் ரூ.1000,    மல்லிகைப்பூ ரூ.800, முல்லை ரூ.700, பிச்சி ரூ.500, அரளி  ரூ.300, செவ்வந்தி ரூ.200, கேந்தி ரூ.150, ரோஜா ரூ.100, வாடாமல்லி ரூ.100,தாமரை ரூ.10.

Tags : Saraswathi ,
× RELATED சங்கரராமன் கொலை வழக்கில்...