பழநி பகுதியில் மீண்டும் பரவும் மர்மக் காய்ச்சல் சுகாதாரத்தை மேம்படுத்தக் கோரிக்கை

பழநி, ஆக. 18:பழநி பகுதியில் மீண்டும் மர்மக் காய்ச்சல் பரவுவது அதிகரித்திருப்பதால் சுகாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பழநி மற்றும் அதன் சுற்றுப்பு கிராமங்களில் கடந்த வருடம் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகளவு பரவி இருந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. சுகாதாரப்பணி, கொசு ஒழிப்பு, சாக்கடை தூர்வாருதல் போன்றவற்றால் காய்ச்சல் பரவாமல் குறைந்தது. கடந்த சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழநி அருகே வில்வாதம்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த மணிகண்டன் என்பவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சாக்கடைகள் சரிவர அள்ளாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிகளவு உருவாகிறது. கொசு மருந்துகள் சரிவர அடிக்கப்படுவதில்லை. பழநி நகரின் மையப்பகுதியில் உள்ள வையாபுரிக் கண்மாயில் அமலைச் செடிகள் அழுகி கிடக்கின்றன. இதில் இருந்தும் கொசுக்கள் அதிகளவு உருவாகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து  காய்ச்சல் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: