×

மார்த்தாண்டத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நெருக்கடி

மார்த்தாண்டம், அக். 18:  குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக மார்த்தாண்டம் விளங்கி வருவதோடு, கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளின் தலைநகரம் போலவும் விளங்கி வருகிறது. மிக குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பகுதியாக மார்த்தாண்டம் உள்ளது. மலையோர மற்றும் கடலோர மக்கள் உட்பட பலரும் மார்த்தாண்டம் பகுதிக்கு தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
 ஆனால், பெருகி வரும் மக்கள்தொகை, வாகனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப மார்த்தாண்டம் பகுதி சாலைகள் விரிவாக்கப்படவில்லை. மார்த்தாண்டம் சந்திப்பை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி, வடக்கு தெரு மற்றும் மார்க்கெட் ரோடு மிகவும் குறுகலாகவே உள்ளன. இதனால் மார்த்தாண்டம் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தை அடைந்து விடுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மார்த்தாண்டம் வடக்குத்தெரு, மார்க்கெட் ரோடு உட்பட சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

குறிப்பாக குறுகலான மற்றும் வளைவான நெருக்கடி மிகுந்த பகுதிகளில் டூ-வீலர்களை வரிசையாக நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால், பஸ்கள் உட்பட வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மார்த்தாண்டத்தில் தாறுமாறாக நிறுத்தியிருந்த பைக்குகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து பைக்குகளை அப்புறப்படுத்தி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.எனவே, வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். மேலும், வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : crisis ,
× RELATED குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி!:...