×

தக்கலை அருகே மெக்கானிக்கை கடத்தி பணம், செல்போன் பறிப்பு 8 பேர் மீது வழக்கு

தக்கலை, அக்.18 :  தக்கலை அருகே டூ வீலர் மெக்கானிக்கை கடத்தி சென்று சரமாரி தாக்கி பணம், செல்போன் பறித்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை செக்காலவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ். இவரது மகன் சுபின்(23). இவர் அழகியமண்டபம் சந்திப்பில் டூ வீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். கடந்த 15ம்தேதி, சுபின் தனது ஒர்க்ஷாப்பில் இருந்த போது, வாலிபர் ஒருவர் தனது நண்பனின் பைக் பழுதாகி நிற்கிறது.  வந்து சரி செய்து தரும்படி கூறினார். இதையடுத்து சுபின், அந்த வாலிபருடன் பைக்கில் சென்றார். அங்கிருந்து மாம்பழத்துறையாறு அணைக்கு செல்லும் வழியில் சுபினை அழைத்து சென்றனர். பின்னர் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு இறங்குமாறு அந்த வாலிபர் கூறினார். இதையடுத்து சுபின் இறங்கிய போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்த மேலும் சில வாலிபர்கள் வந்தனர்.அவர்கள் அனைவரும் சேர்ந்து சுபினை சரமாரி தாக்கினர்.

தன்னை எதற்கு அடிக்கிறீர்கள் என கேட்ட போது, அவர்கள் எதுவும் சொல்லாமல் சரமாரியாக தாக்கியதுடன்,  அங்கிருந்து சுபினை பைக்கில் மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்தும் சரமாரியாக அடித்து உதைத்து, சுபினிடம் இருந்த செல்போன் மற்றும் ₹1700 பணம், ஏடிஎம் கார்டு, லைசென்சு உள்ளிட்டவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் சுபின் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து வந்து, தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சாமியார்மடத்ைத சேர்ந்த சுல்பிகர் அலி, முளவிளை பகுதியை சேர்ந்த சுபின், சாமியார்மடத்தை சேர்ந்த பிரேம்குமார், ஜோஸ், பிரசாந்த் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் என மொத்தம் 8 பேர் மீது கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Takalle ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி