×

அழிக்காலில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

கலெக்டருடன் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ சந்திப்பு
நாகர்கோவில், அக்.18:  அழிக்காலில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கலெக்டரை சந்தித்து வலியுறுத்தினார்.அழிக்கால் பகுதி அடிக்கடி கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுகிறது. இங்கு கடலரிப்பு தடுப்புச்சுவர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நேற்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவை சந்தித்து அழிக்கால் பகுதியில் கடலரிப்பு தடுப்புச்சுவர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அப்போது அழிக்கால் பகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்படுகின்ற பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது. இரண்டு மாதத்தில் கற்கள் போடப்படும் என்று கலெக்டர் உறுதியளித்துள்ளார். மேலும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் பணியாளர்களின்றி உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர், பிரேக் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இல்லை. இதனால் வாகனங்களுக்கு எப்சி சான்றிதழ் பெற முடியவில்லை. புதிய வாகனங்கள் பதிவுசெய்வதிலும் சிரமங்கள் இருந்து வருகிறது. பிரேக் இன்ஸ்பெக்டர்கள் 3 பேர் உள்ள இடத்தில் ஒருவர் கூட இல்லை. திருநெல்வேலியில் இருந்து இங்கு அதிகாரிகள் வருகின்றனர்.

 மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரி வாரத்திற்கு ஒருமுறை வகிறார். தினமும் 200 வாகனங்கள் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மூன்று மாதமாக இந்த நிலை உள்ளது. எனவே இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அப்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்ந்த கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கூறினார். இந்த சந்திப்பின்போது திமுக பேரூர் செயலாளர் பிரபா எழில், ஜாண்சன், அழிக்கால் பங்குதந்தை சோரிஸ் மற்றும் அழிக்கால் ஊர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நாகர்கோவிலில் மரணமடைந்த
அதிமுக பேச்சாளர் குடும்பத்துக்கு ₹50 ஆயிரம் நிதி
நாகர்கோவில், அக்.18:  நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை (53). இவர் அதிமுக தலைமைக்கழக பேச்சாளராக இருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இவர் மரணம் அடைந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், நேற்று முன் தினம் காலை மாதவன் பிள்ளை வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ₹50 ஆயிரம் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் தொகுதி கழக செயலாளர் சுகுமாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு