×

பெண்களிடம் மாடு வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்

புதுச்சேரி, அக். 17:  ஆண்டுதோறும் உலக உணவு தினம் அக்டோபர் 16ம் தேதி வேளாண் துறையால் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த தினம் கொண்டாடப்படுவதின் நோக்கமாக `நம் செயல்கள் நம் எதிர்காலம்- பசியில்லா உலகம் 2030ல் சாத்தியமே’ ஆகும். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண் வளாகத்தில் உழவர் பயிற்சி நிலையம், கூடுதல் வேளாண் இயக்குநர் சார்பில் உலக உணவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வேளாண் அபிவிருத்தி ஆணையரும், துறை செயலருமான அன்பரசு தலைமை தாங்கி பேசும்போது, சமையல் அறையில் மட்டும் தான் பெண்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை மாற்றும்வரை முன்னேற முடியாது. புதுச்சேரிக்கு தினமும் 60 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஆனால் 40 ஆயிரம் லிட்டர் தான் இங்கு உற்பத்தியாகிறது. மீதமுள்ள பால் வெளிமாநிலத்தில் இருந்து தான் வாங்கப்படுகிறது. தேசிய அளவில் ஒரு மாடு ஏழரை லிட்டர் கறப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் புதுச்சேரியில் ஒரு மாடு, 3 லிட்டர் தான் கறக்குகிறது. பால் கறக்கும் திறனை அதிகப்படுத்தி ஒரு லிட்டர் அதிகப்படுத்தினால்  30 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கிடைக்கும்.

எனவே, பெண்களுக்கு மாடு வளர்ப்பதை ஊக்குவித்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதுடன், பால் பற்றாக்குறையும் தீரும். உண்மையாகவே பெண்களுக்கு முன்னேற்றம் வர வேண்டும் என்றால் பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சுதந்திரம் பெற வேண்டும் என்றார். வேளாண் மகளிர் மேம்பாடு மற்றும் உணவு பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி வரவேற்றார். கூடுதல் வேளாண் இயக்குநர் கார்த்திகேயன் தொடக்க உரையாற்றினார். வேளாண் இயக்குநர் ராமகிருஷ்ணன் என்ற பாலகாந்தி, பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார், கூடுதல் வேளாண் இயக்குநர் (உழவியல்) ஜெயசங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் வேளாண் மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறு தானியம், சமைக்காத உணவு வகைகள், குளிர், சூடான பானங்கள், மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள், உடனடி ஆரோக்கிய உணவுகள் என பல்வேறு உணவு வகைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஜிப்மர் முதுநிலை உணவு நிபுணர் மாதவி சரிவிகித உணவு பற்றி எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர் செல்வகணபதி நன்றி கூறினார்.

Tags : Women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...