×

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி, அக். 17:  சத்தான உணவு குறித்து புதுவையில் கல்லூரி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சர்வதேச உணவு தினத்தையொட்டி, புதுவையில்  உள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் சார்பில் புதுவை கடற்கரை சாலையில் நேற்று  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சத்தான உணவு, சுகாதாரமான உணவு, அளவான  உணவு எடுத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய்  சவுத்ரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்பு துணை ஆணையர்  டாக்டர் உபாத்யாயா, நியமன அதிகாரி பாலகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அதிகாரி  தன்ராஜ் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் துறை  இயக்குனர் விஜய்பால் சிங் ஆகியோர் தலைமை தாங்கினர்.

காந்தி திடலில்  தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பீச்சில்  முடிவுற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட என்சிசி, என்எஸ்எஸ் கல்லூரி மாணவ-  மாணவிகள், தன்னார்வலர்கள், கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை  ஏந்தியபடியும், நோட்டீஸ்களை விநியோகித்தபடியும் சென்றனர். அப்போது  லேசான சாரல் மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி மாணவர்கள்  பேரணியில் பங்கேற்றனர்.  இதன் தொடர்ச்சியாக சென்னை, ஐதராபாத் வழியாக ஜனவரி  27ம்தேதி மிதிவண்டி பேரணி டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேரணி  இன்று கடற்கரை காந்தி திடலில் தொடங்கப்படுகிறது. புதுச்சேரி மாணவர்கள்  காலாப்பட்டு வரை செல்கின்றனர். அவர்களுடன் பங்கேற்கும் தமிழகம் உள்ளிட்ட  பிற மாநில இளைஞர்கள் டெல்லி வரை விழிப்புணர்வு வாகன பயணம்  மேற்கொள்கின்றனர்.

Tags : College students awareness rally ,
× RELATED டாக்டர் ஆலோசனைப்படி சிகிச்சை; அரசு...