×

80 ஏரிகளில் வண்டல்மண் எடுத்து கொள்ள அனுமதி

புதுச்சேரி, அக். 17:  புதுச்சேரியில் உள்ள 80 ஏரிகளில் வண்டல்மண் எடுத்துக் கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 84 ஏரிகள் உள்ளன. நிதி நெருக்கடியால் இந்த ஏரிகள் சரிவர தூர்வாரப்படுவது இல்லை. இந்நிலையில் ஏரிகளில் செலவின்றி வண்டல் மண் அள்ளவும், வருவாயத்துறைக்கு போதிய வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்ய அரசு திட்டமிட்டது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டது. கனகன் ஏரி, ஊசுடு ஏரி, கீழ்பரிக்கல்பட்டு ஏரி, மேல்பரிக்கல்பட்டு ஏரி ஆகிய 4 ஏரிகள் தவிர்த்து பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள மற்ற அனைத்து ஏரிகளில் இருந்தும் விவசாயம் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு பொதுமக்கள் மண் எடுத்துக் கொள்ள அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது.

ஏரிகளில் மண் அள்ளுவதற்கு மாட்டு வண்டிக்கு ரூ.50ம், டிராக்டருக்கு ரூ.100ம், லாரிக்கு ரூ.150ம் வசூலிக்கப்பட உள்ளது. எந்தெந்த இடங்களில் மண் அள்ள வேண்டும் என்பதை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் அறிவிக்கும். அந்த இடத்தில் மட்டுமே மணல் அள்ள வேண்டும். ஏரி பராமரிப்பு சங்க கண்காணிப்பில் இது நடக்க வேண்டும். ஆனால், கட்டணத்தை வருவாய்த்துறை தான் வசூலிக்கும். இந்த நிலையில் பொதுப்பணித்துறை கலந்தாய்வு கூடத்தில் மண் எடுத்துக் கொள்ள அரசாணைப்படி உத்தரவு அளிப்பது மற்றும் கட்டண தொகை சம்பந்தமான கூட்டம் நேற்று மாலை நடந்தது. வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் தேவேஷ்சிங் தலைமை தாங்கினார். கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, சப்-கலெக்டர்கள் உதயகுமார், தில்லைவேல், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார் மற்றும் ஏரி சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : lakes ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!