×

புதுவையில் டெங்கு பாதிப்பு குறைந்தது விழிப்புணர்வு

புதுச்சேரி,  அக். 17:  புதுச்சேரியில் இந்தாண்டு முன்கூட்டியே வாய்க்கால் தூர்வாரப்பட்டது, குப்பைகள் முறையாக அள்ளப்பட்டதால்  டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி  தெரிவித்துள்ளார்.  புதுவை அரசு நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்  என்பதில், கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி இடையே தொடர்ந்து மோதல்  நீடித்து வருகிறது. இருப்பினும் கவர்னர் கிரண்பேடி அவ்வப்போது அரசு உயர்  அதிகாரிகளை ராஜ்நிவாஸ் அழைத்து அரசின் திட்டப் பணிகள் தொடர்பாக ஆலோசனை  நடத்தி வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் சுகாதாரத்துறை செயலர்  கந்தவேலுவுடன் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது புதுவை மக்களை  அச்சத்தில் ஆழ்த்தியுள்ள டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய்  பாதிப்புகள், குப்பைகள் தூர்வாரப்பட்டதால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்  குறித்து விவாதிக்கப்பட்டது.

இது குறித்து வாட்ஸ் அப்பில் கவர்னர் பதிவிட்டுள்ளார். அதில், புதுச்சேரியில்  குப்பைகள், வாய்க்கால் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதால் இந்தாண்டு டெங்கு  காய்ச்சல் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. அதாவது 2016 செப்டம்பரில் இதனால் 37 பேர்  பாதிப்புக்குள்ளாகி இருந்த நிலையில் கடந்தாண்டு (2017) டெங்கு நோய் தாக்கம்  அதிகமாக இருந்தது. அதாவது 1,092 பேர் வரை இந்நோயால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றிருந்தனர். ஆனால் 2018ல் இதுவரை 48 பேர் மட்டுமே டெங்கு  பாதிப்பு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவது உறுதிசெய்யப்பட்டது. சுகாதாரத்துறை செயலருடன் நடந்த ஆலோசனைக்குபின் இத்தகவலை வெளியிட்டுள்ள  கவர்னர் கிரண்பேடி இப்பணிகளை தொடர்ந்து துரிதமாக அதிகாரிகள் செயல்படுத்த  வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...