×

₹6 லட்சம் மதிப்பில் குடுவையாறு தூர்வாரும் பணி துவக்கம்

வில்லியனூர், அக். 14: வில்லியனூர் அருகே உள்ள உறுவையாறு அடுத்த குடுவையாற்றை தூர்வாரும் பணி ரூ.6 லட்சத்து 71 ஆயிரம் செலவில் புதுவை அரசின் நீர்பாசன உட்கோட்டம் சார்பில் தனியார் பங்களிப்புடன் நடந்தது. இப்பணிகளை கவர்னர் கிரண்பேடி பூமிபூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் ஆற்றின் விபரங்கள் மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது ஆற்றின் வரைபடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் காண்பித்து விளக்கம் அளித்தனர். அப்போது 18 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த ஆற்றில் 11 கிலோ மீட்டர் புதுச்சேரி மாநில பகுதிக்குள் வருகிறது. 7 படுகை அணைகள் உள்ளன. இதன்மூலம் 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அப்பகுதி மக்கள் உறுவையாறு அருகே கோர்க்காடு பகுதியில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைக்கேட்ட கவர்னர் சம்பந்தப்பட்ட ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, சுகுமாறன் எம்எல்ஏ, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...