×

ரேஷன் கடை பணியாளர்கள் 2ம் நாளாக ஆர்ப்பாட்டம்

கடலூர், அக். 17: ஊதிய மாற்றம், அரசு பணியாளர்களுக்கு வழங்குவதை போல அகவிலைப்படி உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் (15ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது. ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி நேற்று 2வது நாளாக மாவட்ட தலைநகரங்களிலும், வட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியரகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முத்துபாபு தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார்.

நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா முன்னிலை வகித்தார். டாஸ்மாக் பணியாளர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கடலூர் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று(17ம் தேதி) கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 15 இடங்களில் நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினரின் மறியல் போராட்டம் நடக்கிறது.

Tags : Ration shop workers ,
× RELATED பெண் பணியாளர்களுக்கு ரேஷன் கடைகளில் கழிவறை வசதி பணியாளர் சங்கம் கோரிக்கை