×

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நகராட்சி ஆணையாளர் ஆய்வு

சிதம்பரம், அக். 17: பருவநிலை மாற்றத்தினால் தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழைக்காலத்தில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் காலி பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தி வருகிறது. காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதும், டெங்கு கொசுக்களை உருவாக்கும் காலி குடிநீர் பாட்டில்கள் குவியலாக கிடந்ததும் ஆய்வுக்கு வந்த நகராட்சி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று காலை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா, சுகாதார ஆய்வாளர்கள் பால் டேவிஸ், தர்மராஜன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராஜாராம், காமராஜ், ஆனந்தகுமார், தூய்மை பணி மேற்பார்வையாளர் சுதாகர் உள்ளிட்ட அலுவலர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் தமிழரசன் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர். அப்போது நகராட்சி வளாகத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனை பூங்கா அருகே குவியலாக காலி குடிநீர் பாட்டில்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட ஆணையாளர் சுரேந்திரஷா அதனை உடனே அப்புறப்படுத்த உத்தரவிட்டதோடு மட்டுமின்றி கடுமையாக எச்சரிக்கையும் விடுத்தார். இதற்கிடையே அங்கிருந்த கட்டிடத்தின் பின்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி கேன்களை சுற்றி மழைநீர் தேங்கியிருந்தது., மேலும் அவசர சிகிச்சை பிரிவு மேல் தளத்தில் தண்ணீர் செல்லும் இடம் அடைபட்டிருந்ததால் அங்கு தண்ணீர் தேங்கி நின்றதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுகாதாரமாக வைத்து கொள்ளவும் ஆணையாளர் சுரேந்திரஷா மருத்துவமனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags : government hospital ,Chidambaram ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்