×

கூட்டாளியை கொலை செய்த வழக்கில் இருவர் கைது

வேப்பூர், அக். 17: வேப்பூர் அருகே கூட்டாளியை கரும்பு கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் அருகே, கடந்த மாதம் 14ம் தேதி அடையாளம் தெரியாத நபர் கரும்பு கட்டைகளால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார். தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜான்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இதில், இறந்தவர் சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியை அடுத்த ஒட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம்(35) என்பதும், தனது கூட்டாளிகளான ராமநாதபுரம் மாவட்டம், அரண்மனை வாசலை சேர்ந்த தினேஷ்குமார்(34), நீமாங்குளத்தை சேர்ந்த கலைஞானம், காளையார் கோவிலை சேர்ந்த கல்யாண சுந்தரம்(34), சிவகங்கை மாவட்டம், கோமாலிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி ஆகியோருடன் கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதில், கடந்த மாதம் 14ம் தேதி தினேஷ்குமார் மற்றும் கல்யாணசுந்தரத்தை போலீசார் தர்மபுரியில் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த வேப்பூர் போலீசார் இருவரையும்   பரோலில் எடுத்து விசாரித்ததில், வெள்ளைச்சாமி தலைமையில் பல மாவட்டங்களில் கொள்ளையில் ஈடுபட்டதால் காளையார்கோவில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி முஷ்ணம் அருகே உள்ள கிராமத்தில் ராஜமாணிக்கம் நண்பர் கண்ணதாசன் வீட்டிற்கு சென்று தங்கினர். இதன் பின்னர் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மறுநாள் இரவு வேப்பூர் அடுத்த காப்புக் காட்டை ஒட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி கரும்பு கட்டையால் ராஜமாணிக்கத்தை கடுமையாக தாக்கி தூக்கி வீசி விட்டு பணத்தை எடுத்து தப்பி சென்றனர். இது குறித்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜான்சி வழக்கு பதிந்து தினேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான கலைஞானம் மற்றும் வெள்ளைச்சாமியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...