×

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை புவனகிரி நகரில் கலெக்டர் ஆய்வு

புவனகிரி, அக். 17: புவனகிரி நகரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் சிதம்பரம் சப்-கலெக்டர் விசு மகாஜன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இளங்கோவன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேற்று புவனகிரியில் அதிரடி ஆய்வு நடத்தினர். புவனகிரி பாளையக்காரத்தெரு, கவரப்பாளையத் தெரு, கோட்டை மேட்டுத்தெரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர், நீர் நிலைகளுக்கு அருகிலும், ஏடிஎஸ் கொசு உற்பத்தியாக கூடிய இடங்களிலும் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியும், நீர் நிலைகளுக்கு அருகில் சாக்கடை தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். பின்னர் தேவாங்கர் தெருவில் குடிநீர் தொட்டி அருகில் ஆய்வு நடத்திய கலெக்டர் அன்புச்செல்வன், அங்கு ஏடிஎஸ் கொசு உருவாகுவதற்கான அறிகுறிகள் இருப்பதை கண்டுபிடித்து அவற்றை அகற்றிட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தாமரை குளத்தெரு பகுதிக்கு சென்றபோது அப்பகுதி பொதுமக்கள், திருமண மண்டபங்களின் கழிவுநீர் தாமரைக்குளத்தில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து திருமண மண்டபத்தை ஆய்வு செய்த கலெக்டர், மேலும் உரிய ஆய்வு நடத்தும்படி சிதம்பரம் சப்-கலெக்டருக்கு உத்தரவிட்டார். புவனகிரி பஸ் நிலையத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர், அங்கு உள்ள ஓட்டல் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைக்கப்படுவதை கண்டுபிடித்து, இட்லி மாவை எடுத்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார். பின்னர் பஸ் நிலையத்தின் வழியாக ஓடும் சாக்கடை கால்வாயை பார்வையிட்ட அவர், அவற்றை சுத்தப்படுத்த உத்தரவிட்டார். புவனகிரி நகரின் பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடத்திய கலெக்டர், நகரில் சுகாதார பணிகளை சரியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம், மருத்துவத்துறை இணை இயக்குநர் கீதா, உதவி செயற்பொறியாளர் ராஜா உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Tags : Bhuvanagiri ,
× RELATED விசா முடிந்து புதுவையில் தங்கிய இலங்கை தமிழர் மீது வழக்கு