×

பாங்க் ஆப் பரோடா சார்பில் நடந்த விவசாய கண்காட்சியில் ₹40 லட்சம் கடனுதவி

சேலம், அக்.17: சேலம் அருகே பாங்க் ஆப் பரோடா சார்பில் நடந்த விவசாய கண்காட்சியில், ₹40 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. உலக உணவு தினத்தை முன்னிட்டு, பாங்க் ஆப் பரோடா சார்பில் விவசாய கண்காட்சி சேலத்தில் நடந்தது. அயோத்தியாபட்டணம் கஸ்தூரிபாய் மண்டபத்தில் நடந்த கண்காட்சிக்கு, பாங்க் ஆப் பரோடாவின் கோவை பிராந்திய துணை பொதுமேலாளர் தோமசன் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில், நபார்டு துணை பொதுமேலாளர் பாமா புவனேஸ்வரி கலந்து கொண்டு, கண்காட்சியை திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார். வேளாண் இடுபொருட்கள் விற்பனை, சொட்டுநீர் பாசனம், பட்டுக்கூடு வளர்ப்பு,

தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு, பசுமை நர்சரி, தோட்ட வேலி மற்றும் சேகோ யூனிட் சார்பில், 30 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டன. அயோத்தியாபட்டணம் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது, பாங்க் ஆப் பரோடா சார்பில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன், நகைக்கடன், வாகன கடன், வீட்டுக்கடன், கால்நடைக்கடன், உணவு மற்றும் தானிய உற்பத்தி கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானிய கடன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கண்காட்சியையொட்டி, 20 விவசாயிகளுக்கு ₹40 லட்சம் கடனுதவியும், சிறந்த விவசாயிகள் 10 பேருக்கு நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags : farm exhibition ,Bank of Baroda ,
× RELATED வங்கிகளுக்கு ரூ.10.34 கோடி அபராதம்