ஐவிடிபி சுய உதவிக்குழு சார்பில் கேரள வெள்ள நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரியை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வரும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து, கிராமப்புற ஏழை எளிய மகளிரை பொருளாதார ரீதியில் உயர்வடைய செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 800 சுய உதவிக்குழுக்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் உள்ளனர். மழை, வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான கேரள மக்களின் துயர்துடைக்க ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தலா ₹50 வழங்க முன்வந்தனர். உறுப்பினர்கள் வழங்கிய தொகையுடன், ஐவிடிபி நிறுவனம் இணைந்து ஒரு கோடி ரூபாய் சேர்க்கப்பட்டது.

அவ்வாறு சேர்த்த ஒரு கோடி ரூபாயை வங்கி வரைவோலையாக எடுத்து, கேரள மாநில தலைமை செயலகத்தில், அம்மாநில முதல்வர் பினராயிவிஜயனிடம், ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தைபிரான்சிஸ் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அம்மாநில முதல்வர், ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கேரள மாநில மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

Related Stories: