×

சுற்றுப்புற தூய்மை மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி, அக்.17: பள்ளியை மட்டுமின்றி சுற்றுப்புற தூய்மையிலும் கவனம் செலுத்த வேண்டுமென ஜேஆர்சி பயிற்சி முகாமின்போது மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட அளவிலான ஜேஆர்சி பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளர் ஜெயராமன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன், மாவட்ட கன்வீனர் பாலமுருகன், ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் கலை சண்முகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். பாலேகுளி பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர், யோகா பெரியசாமி ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று, சேவை மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்க நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பது குறித்து விளக்கி பேசினர்.

பயிற்சியின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேசியதாவது: அனைத்து பள்ளிகளிலும் ஜேஆர்சி, ஸ்கவுட் போன்ற பயிற்சிகளை மாணவ, மாணவியர்களுக்கு அளிக்க வேண்டும். நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடத்துவது போல், ஜேஆர்சியிலும் மாணவ, மாணவியர்களுக்கு முகாம் நடத்த வேண்டும் . பள்ளிக்கு உள்ளே மட்டுமில்லாமல், பள்ளியைச் சுற்றிலும் உள்ள பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஆலோசகர் கவிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பார்த்தீபன், ரவிச்சந்திரன், கணேசன், ஜெயப்பிரகாஷ், ரவி, விநாயகம், அன்புச்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா