மேலூர் அருகே பாசன வாய்க்காலிலுள்ள கருவேல மரங்களை அகற்ற வழக்கு அதிகாரிகள் விளக்கமளிக்க உத்தரவு

மதுரை, அக். 17:  மேலூர் அருகே பாசன வாய்க்காலிலுள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலூர் அருகேயுள்ள கீழவளவைச் சேர்ந்த ஜெயராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் சுற்றுப்பகுதி கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தையே ஆதாரமாக கொண்ட பகுதியாகும். தண்ணீர் பற்றாக்குறையை போக்கி, விவசாயப் பணிகள் தொய்வின்றி நடக்கும் வகையில், பெரியாறு-வைகை பாசன மூலம் மேலூர் தாலுகாவிற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதன்படி, பெரியாறு-வைகை பாசனத்தில் கீழவளவு கீழையூர் முதல் இ.மலம்பட்டி வரையில் 8வது வாய்க்கால் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.இந்த கால்வாய் மூலம் சிறுவனை, களரியேந்தல் உள்ளிட்ட 10 கண்மாய்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் விவசாயப் பணிகள் நடக்கிறது. இந்த வாய்க்காலில் அதிகளவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. தண்ணீர் செல்ல வழியின்றி சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த வாய்க்காலே எங்கள் பகுதியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்தப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் காலத்தில் இந்த வாய்க்கால் மூலமே மிகவும் குறைந்தளவே தண்ணீரே வருகிறது. இதனால், பல நேரங்களில் கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வாய்க்காலில் உள்ள கருவேலம் மரங்களையும், குப்பைகளையும் அகற்றக் கோரி சுற்றுப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியும், தொடர்ந்து மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு 8வது வாய்க்காலில் உள்ள கருவேல மரங்களையும், குப்பைகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: