×

‘பிஎச்எச்’ ரேஷன்கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவர் பெயர், புகைப்படம் திருத்த பணிகள் தொடக்கம்

நாகர்கோவில், அக்.17: பிஎச்எச் ரேஷன் கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவர் என்பதால் அவ்வாறு இடம்பெறாத ரேஷன்கார்டுகளில் பெண்களின் புகைப்படம் சேகரித்து திருத்தம் செய்யும் பணிகளில் வழங்கல் துறை ஈடுபட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் 1.11.2016 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 4 நபர்கள் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்குதலில் எவ்வித மாற்றமும் இல்லை. இவை என்பிஎச்எச் கார்டுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. 4 நபர்களுக்கு மேல் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் அரிசி  கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 4 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட ரேஷன்கார்டு பிஎச்எச் (பிரியாரிட்டி ஹவுஸ் ஹோல்டு) எனப்படும் முன்னுரிமை பெற்றவர் ரேஷன்கார்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உள்ள ரேஷன்கார்டில் வயதில் மூத்த பெண்ணே இனி குடும்ப தலைவர் ஆவார். இதில் ஆண்கள் மட்டுமே அல்லது 18 வயது நிரம்பாத பெண் உறுப்பினர் உள்ள ரேஷன்கார்டுக்கு வயதில் மூத்த ஆண் உறுப்பினர் குடும்ப தலைவர் ஆவார்.

இதனால் பிஎச்எச் ரேஷன்கார்டுகளில் குடும்ப தலைவராக வயதில் மூத்த ஆண்கள் படம், பெயர் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பான விபரங்களை திருத்தம் செய்யவும், அக்குடும்பத்தில் வயதில் மூத்த பெண்ணை குடும்ப தலைவராக தெரிவித்து அவரது புகைப்படத்தையும் ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற செய்ய வேண்டும் என்று வழங்கல் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பிஎச்எச் ரேஷன் கார்டுகளில் ஆண்கள் படம் இடம்பெற்றிருந்தால் அந்த கார்டு வைத்திருப்போரிடம் இருந்து ரேஷன்கார்டில் இடம்பெற்றுள்ள வயதில் மூத்த பெண்ணின் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு நகல், அவரது புகைப்படம் ஆகியவற்றை ரேஷன்கடை விற்பனையாளர்களே பெற்று வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். ஒவ்வொரு ரேஷன்கடைகளிலும் குறைந்தபட்சம் 20 முதல் 30 பேரின் ரேஷன்கார்டுகளில் இந்த திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் தற்போது நான்கு தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 31 ஆயிரத்து 164 ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளன என்றும், இவற்றில் மொத்தம் 18 லட்சத்து 70 ஆயிரத்து 854 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Tags : Women ,head ,PHH ,photo editing works ,
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...