×

8 கி.மீ. பறக்கும் பாலம் திட்டத்தில் புதிய மாற்றம்

மதுரை, அக். 17:  ஊமச்சிகுளம் முதல் சொக்கிகுளம் வரையிலான தேசிய பறக்கும் சாலை திட்டத்தில் புதிய மாற்றமாக ஏறி, இறங்க வசதியாக அழகர்கோவில் சாலையில் தல்லாகுளம் வரை நீடிக்கப்படுகிறது. இங்கிருந்து கோரிப்பாளையம் தேவர் சந்திப்பு வரை மாநில நெடுஞ்சாலை துறை உயர்மட்ட பாலம் கட்டி இரு பாலங்களும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை- நத்தம் சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் ரூ.1,028 கோடி மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் மதுரை சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கி.மீ. தூரம் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. இதில் 225 தூண்கள் எழுப்ப திட்டமிட்டு, இயந்திரங்கள் மூலம் அஸ்திவாரம் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பறக்கும் பாலத்தில் வாகனங்கள் ஏறி, இறங்குவதற்கு வசதியாக புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி சொக்கிகுளம் பி.டி.ஆர். சிலை பகுதியை மையமாக கொண்டு, பறக்கும் பாலத்தில் ஏறி, இறங்க வசதியாக அழகர்கோவில் சாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை சரிவு பாலம் நீட்டிக்கப்படுகிறது. இதில் பெரியார் சிலையில் இருந்து மாவட்ட நீதிமன்ற சாலையிலும் ஏறி, இறங்கும் வகையில் பாலத்தின் பாதை உருவாகிறது. இதுதவிர கோகலே சாலையிலும் பாதை அமைகிறது. இதன் மூலம் பறக்கும் பாலம் அழகர்கோவில் சாலை வரை செல்வதால், அதன் நீளம் 7.4. கி.மீ. என்பது 8 கி.மீ. வரை அதிகரிக்கிறது. இதற்காக அந்த சாலைகளில் தூண்கள் கட்டுவதற்காக தற்போது அஸ்திவாரம் தோண்டப்படுகிறது.
அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி அலுவலக காம்பவுண்ட் சுவரில் இருந்து 13 மீட்டர் இடம் சாலை விரிவாக்கம் மற்றும் பறக்கும் பாலத்தின் ஏறு பாதைக்காகவும் சேர்க்கப்படுகிறது. தேசிய பறக்கும் பாலத்தை மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு வரை நீடித்தால் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும் என போக்குவரத்து ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதை தேசிய ஆணையம் ஏற்கவில்லை. அழகர்கோவில் சாலையில் ஏறி, இறங்குவதற்கு வசதியாக தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை நீடிக்கிறது. இந்த பாலத்துடன் இணைக்க மாநில நெடுஞ்சாலை உயர்மட்ட பாலம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதன்படி அழகர்கோவில் சாலையில் பெருமாள் கோயில் அருகில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வரை நெடுஞ்சாலை உயர்மட்ட பாலம் கட்டுகிறது. கோரிப்பாளையத்தை அன்றாடம் மூன்றரை லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.   இங்கு ஏற்கனவே தயாரான பறக்கும் பாலம் திட்டம் நில ஆர்ஜித சிக்கல் எழுந்து கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக உயர்மட்ட பாலமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலம் தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகில் இருந்து ஆரம்பித்து  கோரிப்பாளையம் சந்திப்பில் வைகை ஆற்று பாலத்திற்கும், செல்லூரை நோக்கியும் இரு பிரிவாக பிரிகின்றன. சுமார் ஒன்றரை கி.மீ. நீளத்தில் அமையும் இந்த உயர்மட்ட பாலத்தின் இடையில் தமுக்கம் சந்திப்பில் காந்தி மியூசியம் நோக்கியும், நேரு சிலை நோக்கியும் பிரிவு பாதைகள் அமைகின்றன. இந்த பாலத்தின் மதிப்பீடு ரூ.131 கோடியாகும்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...