விளையாட்டு விபரீதமானது வலி நிவாரணி தைலம் குடித்த வாலிபர் பலி கொடைக்கானலில் சோகம்

கொடைக்கானல், அக். 17: கொடைக்கானலில் ஒரு குறிப்பிட்ட பெயரில் உள்ள உடல்வலி நிவாரணி தைலம் விற்பனைக்கு நகராட்சி தடை விதித்துள்ளது. காரணம், இந்த தைலத்தை குடித்தவர்கள் யாரும் உயிர் பிழைத்ததில்லை. கொடைக்கானலில் மட்டும் இத்தைலத்தை குடித்து 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த மோகன் மகன் விஜய் (20). இவர் ஏழுரோடு சந்திப்பில் தைலக்கடை வைத்துள்ளார்.

கடந்தவாரம் விஜய் தனது கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட தைலத்தை, ‘இது ஒன்றும் செய்யாது’ என நண்பர்களுடன் போட்டிபோட்டு விளையாட்டுத்தனமாக குடித்துள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜய் முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் நகராட்சியால் தடை செய்யப்பட்ட தைலம் சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே இனியாவது இத்தைலத்தை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: