×

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்

திருப்பூர், அக்.16: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தென்மாவட்ட மற்றும் பிற மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல கடந்தாண்டைப் போல, இந்த ஆண்டும் சிறப்பு பஸ்களை முன்கூட்டியே இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் கட்டிங், பேட்லாக், ஓவர்லாக், போல்டிங், அயர்ன், மெசின், சிங்கர், பேக்கிங், செக்கிங், லேபிள், கைமடித்தல், டேமேஜ், அடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், நாகர்கோவில், நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டிணம், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தோடு தங்கி திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொண்டாட ஆண்டு தோறும் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது திருப்பூர் பஸ் நிலையங்களில் லட்சக்கணக்கானோர் வெளியூர் செல்ல குவிவர்.

ஆனால், திருப்பூரில் இருந்து தங்கள் ஊருக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் தென்மாவட்ட மற்றும் பிற மாவட்ட பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாவர். பண்டிக்கைக்கு ஒரிரு நாட்கள் முன்பு தங்கள் ஊருக்கு செல்ல பஸ் கிடைக்காமல் திண்டாடுவர். மேலும், கூட்ட நெரிசலில் நின்று கொண்டும், படியில் அமர்ந்து கொண்டும் பல நூறு கி.மீ., தூரமும் பயணம் செய்வர். இதனால், பஸ் நிலையத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக திருச்சி, மதுரை, தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்வோர் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஆண்டு தோறும் இந்த நிலை ஏற்படுவது வழக்கம். இதை தவிர்க்கும் வகையிலும், வெளியூர் பனியன் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை கால சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்களை முன்கூட்டியே இயக்க வேண்டும் என்று வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Diwali ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது