×

சிறு,குறு நிறுவனங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்

திருப்பூர்,அக்.16: சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான முதலீட்டில் தொழில் துவங்குபவர்களுக்கு 2 ஆண்டு வரிவிலக்கு அளிக்க வேண்டும். வீடுகளுக்கு வழங்கப்படுவது போல இவர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) கோரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கமான சிஸ்மாவின் பொதுச்செயலாளர் பாபுஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டில் பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு நிறுவனங்கள் நாட்டில் 35 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகின்றன.  கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பின்னலாடை மூல பொருட்களின் விலையும்  கடுமையாக உயர்ந்துள்ளது.

எனவே சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்து தொழில் செய்பவர்களுக்கு 2 ஆண்டுவரை வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் வீடுகளுக்கு அளிக்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் போல சிறு,குறு நிறுவனங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கவேண்டும். மேலும் சிறு குறு தொழில் செய்வதற்கு மாவட்டம் தோறும் தொழிற் பேட்டை அமைத்து தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்த நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : enterprises ,
× RELATED ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை,...