மேட்டூர் அருகே காவல்நிலைய ‘டோர் லாக்டு’ என கடிதம் திரும்பி வந்ததால் அதிர்ச்சி

மேட்டூர், அக்.16:  சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் சதாசிவம். வக்கீலான இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்காக கொளத்தூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மலர்விழி என்பவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 24.9.18ம் தேதி அனுப்பிய கடிதம் மறுநாள் 25.9.18ம் தேதி கதவு பூட்டப்பட்டிருப்பதாக கூறி திரும்பியுள்ளது. அதேபோல், 26.9.18ம் தேதியும் “டோர் லாக்டு” என போடப்பட்டு, 6.10.18ம் தேதி திரும்பி வந்துள்ளது. இதனை பார்த்து வக்கீல் சதாசிவம் அதிர்ச்சிக்குள்ளானார். 24 மணி நேரமும் காவல்நிலைய கதவுகள் பூட்டப்படக்கூடாது என்பது விதிமுறையாகும்.

ஆனால், 2 நாட்கள் பூட்டப்பட்டிருந்ததாக கூறி கடிதம் திரும்பி வந்திருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக சதாசிவம் தெரிவித்தார். பகல் நேரத்தில்தான் தபால்காரர் காவல்நிலையத்திற்கு சென்றிருக்க வேண்டும். 25.9.18, 26.9.18ம் தேதிகளில் கதவு பூட்டப்பட்டிருப்பதாக தபால்காரர் பதிவு செய்துள்ளார். பகலில் காவல்நிலைய கதவுகளை பூட்டிவிட்டு காவலர்கள் சென்றிருந்தது எங்கே? ஒட்டுமொத்த விடுப்பு எடுத்துக்கொண்டார்களா? என தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: