ஆத்தூரில் அனுமதியின்றி இயக்கம் விதி மீறும் ஷேர் ஆட்டோக்களால் விபத்து அபாயம்

ஆத்தூர், அக்.16: ஆத்தூர் நகரில் விதி மீறி இயக்கப்படும் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலால் அவதிக்குள்ளாகி வருவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு தினசரி சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இதனால், பகல் வேளைகளில் அனைத்து பகுதிகளிலும் மிகுந்த மக்கள் நடமாட்டம் காணப்படும். அவர்களை குறிவைத்து போக்குவரத்து வசதிக்காக ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களால் மிகுந்த பயனளிப்பதாக இருந்தாலும், மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தினசரி அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பாலு மற்றும் சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், ஆத்தூர் நகரில் இருந்து நீதிமன்றம், கோட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் ஆத்தூர் நகரத்தை விட்டு நரசிங்கபுரம் பகுதிக்கு சென்றன. இதையடுத்து, ஷேர் ஆட்டோக்களின் ஓட்டம் அதிகரிக்க துவங்கியது. இந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்களை ஏற்றுவதோடு, எந்தவித கட்டுப்பாடின்றி எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஷேர் ஆட்டோ ஓட்டிகளில் பெரும்பாலானோருக்கு உரிய ஓட்டுனர் உரிமம் கூட இல்லை என்பதும், பல ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆத்தூர் போலீசாரிடமும், போக்குவரத்து துறையினரிடமும் பொதுமக்கள் சார்பிலும், பொது அமைப்புகள் சார்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணமும் வசூல் செய்கிறார்கள். குறிப்பாக விநாயகபுரம் வரை ₹7 வசூல் செய்துவந்தவர்கள் தற்போது எங்கு ஏறினாலும், இறங்கினாலும் ₹10 என வசூலிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இந்த ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த போக்குவரத்து துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இந்த ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்தி சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். இந்த ஷேர் ஆட்டோக்களால் சாதாரண ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் வேலையிழப்பிற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆத்தூர் நகரில் ஷேர் ஆட்டோ ஓட்ட எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. ஆனால், குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சலுகையாக உள்ளது என ஆரம்பத்தில் அதிகாரிகள் இதுபோன்ற ஷேர் ஆட்டோக்களின் ஓட்டம் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களும் ஒருசிலர் தானே என எதையும் கேட்டகாமல் இருந்தோம். ஆனால், ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. அப்போது, நாங்கள் எங்களின் ஆட்டோக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் சாரதா பங்க் ரவுண்டனா பகுதியிலிருந்து ஷேர் ஆட்டோக்களை இயக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்.

ஆனால், அவர்கள் எங்களது ஆட்டோக்களுக்கு பாதிப்பு வரும் வகையிலேயே செயல்பட்டு வருகின்றனர். தற்போது, பழைய பேருந்து நிலைய பகுதியிலிருந்து பெரியார் சிலை பகுதி, சாரதா ரவுண்டனா வரை ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இதனால், இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும், தற்போது கட்டணத்தையும் உயர்த்தி வசூலிக்கிறார்கள். இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவிதநடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் பேசுவதற்காக அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, அவர் விடுமுறையில் சென்றுவிட்டதாக தெரிவித்தனர். அவர், பணிக்கு திரும்பியதும் நேரில் வந்து கேட்டுக்கொள்ளுமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தனர்.

Related Stories: