கடன் வழங்குவதாக கூறி கணவன், மனைவி வங்கி கணக்கில் ரூ.80,000 அபேஸ்

திருச்சி, அக். 16: திருச்சியில் கடன் தருவதாக கூறி ஏடிஎம் கார்டின் ரகசிய குறியீடு எண்ணை பெற்று கணவன், மனைவியின் வங்கி கணக்கில் ரூ.80ஆயிரம் அபேஸ் செய்தது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர் அழகுமுத்து (45). இவரது மனைவி தனலட்சுமி (40). அழகுமுத்து அதே பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவரது மனைவி சுந்தர்நகரில் உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த வாரம் அழகுமுத்துவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு ராம் சிட்டி பைனான்ஸ்சில் இருந்து பேசுகிறோம்.  உங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி வங்கி கணக்கு எண், ஏடிஎம் ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை பெற்றனர். அதேபோல் தனலட்சுமியையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இருவரும் அனைத்து விவரங்களை தெரிவித்த நிலையில் இருவரின் வங்கி கணக்கில் இருந்து தலா ரூ.40 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. இதற்கான குறுஞ்செய்தி இருவரின் செல்போன் எண்ணிற்கு வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் நேற்று இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த உருளைகிழங்கு வியாபாரியிடம் செல்போனில் பேசி கடன் தருவதாக கூறி மோசடி செய்த சென்னையை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: