×

பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு பசுமை வீடு கட்ட ஆணை

திருச்சி, அக்.16: பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் படிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை, 2 சைக்கிள், வாழ்வாதாரத்திற்கு ரூ.50,000த்திற்கான காசோலை ஆகிய உதவிகளை கலெக்டர் ராஜாமணி நேற்று வழங்கினார். ரங்கம் தாலுகா, அந்தநல்லூர் ஒன்றியம், முள்ளிக்கரும்பூர், முல்லைநகரை சேர்ந்த மருதமுத்து-ரெங்கநாயகி தம்பதிக்கு மகள்கள் சூரியபிரியா, மைதிலி, கிருஷ்ணவேணி, மகன் அரவிந்த்ராஜ் ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு ரங்கநாயகி உடல்நலக்குறைவால் இறந்துபோனார். கடந்த 16ம்தேதி மருதமுத்து இறந்தார். இதனால் பெற்றோரை இழந்த 4 பேரும் பழமையான வீட்டில் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகின்றனர். சூரியபிரியா எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பும், அதே பள்ளியில் அரவிந்த்ராஜ் 6ம் வகுப்பும் படிக்கின்றனர். திருச்சி சேவாசங்கம் பள்ளியில் மைதிலி 10ம் வகுப்பும், கிருஷ்ணவேணி 8ம் வகுப்பும்  அரசு விடுதியில் தங்கி படிக்கின்றனர். குழந்தைகளின் நிலையறிந்த எட்டரை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அமலிசகாயமேரி, கணினி ஆசிரியை பூபதி பிரியா ஆகியோர் திருச்சி கலெக்டர் ராஜாமணியிடம் உதவி கோரி அழைத்து வந்து ஏற்கனவே மனு அளித்தனர்.

குழந்தைகளின் நிலையறிந்த கலெக்டர் ராஜாமணி, உடனடியாக முதல்வர் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதாகவும், குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கான செலவுகளை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 4 குழந்தைகளுக்கும் முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு ரூ.2.10 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான ஆணையும், வாழ்வாதாரத்துக்காக ரூ.50,000த் திற்கான காசோலையும், வீட்டில் இருந்து பள்ளி சென்று வருவதற்கு வசதியாக இரண்டு சைக்கிள்களும் கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.

Tags : children ,house ,parents ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...