திருச்சியில் தடை மீறி ஆர்ப்பாட்டம், மறியல் 184 பேர் கைது

திருச்சி, அக். 16: திருச்சியில் நேற்று வேளாளர் மாண்பு காப்பு கூட்டமைப்பு சார்பில் தடைமீறி ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட 184 பேர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். வேளாளர் என்ற பெயர் தங்களுக்கு மட்டுமே சொந்தம், வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும், தேவேந்திரகுல வேளாளர் என்று யாரும் கூறக்கூடாது என வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே வேளாளர் மாண்பு காப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த கோட்டை போலீசில் ஏற்கனவே அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர். ஆனால் அறிவித்தபடி போராட்டம் நடக்கும் என அச்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வேளாளர் மாண்பு காப்பு கூட்டமைப்பை சேர்ந்த திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால், கன்னியாகுமரி, சென்னை, மதுரை, தேனி, கம்பம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அங்கு திரண்டனர்.

கூட்டமைப்பு நிர்வாகிகள் திருச்சி பாண்டியன், மதுரை உதயகுமார், சென்னை சிங்காரவேல் பிள்ளை ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்திற்கு தயார் நிலையில் இருந்தனர். உதவி கமிஷனர்கள் பெரியய்யா, கோடிலிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடையைமீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போலீசார் கெடுபிடியால் ஒரு பகுதியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீ சாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதையடுத்து போலீசார் 3 பெண்கள் உள்பட 184 பேரை குண்டு கட்டாக கைது செய்தனர். இதில் கைதான அனைவரும் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், இன்று (நேற்று) போராட்டம் நடத்த கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. முதலில் அனுமதி கொடுத்த போலீசார் திடீரென 2நாட்களுக்கு முன்பு , காரணமின்றி அனுமதியை ரத்து செய்தனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து அனைவரும் திரண்டதால் அறிவித்தபடி போராட்டம் நடத்தினோம் என்றார்.

Related Stories: