×

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக். 16 : 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்ததை துவக்கியுள்ள நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டனர். நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களை எடை குறையாமல் கடை விற்பனையாளர்கள் முன்னிலையில் எடை வைத்து வழங்க வேண்டும், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவப் படிப்பினை உயர்த்தி வழங்க வேண்டும், பணிவரன்முறை செய்யப்படாத ஊழியர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும், நியாய விலை கடைகளுக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் நீண்ட காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தாங்கள் அறிவித்தவாறு கடைகளை அடைத்து போராட்டத்தினை துவக்கியுள்ளனர். அதன்படி  திருவாரூர் மாவட்டத்தில் 625 நியாயவிலை கடைகளில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பபட்ட கடைகள் இயங்காததால் பொது மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளர் குணசீலன் மற்றும் பொறுப்பாளர்கள் தங்கராசு, ராஜேந்திரன், குமார், சரவணன், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,strike ,Rationine ,
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...