×

வேப்பனஹள்ளி-கிருஷ்ணகிரி இடையே கூடுதல் அரசு பஸ் இயக்கக்கோரி மனு

கிருஷ்ணகிரி, அக்.16:  கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. வேப்பனஹள்ளி ஒன்றியத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் எப்ரி, பல்லேரிப்பள்ளி, மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், தடத்தாரை, அத்திகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 200க்கும் அதிகமான கல்லூரி மாணவ, மாணவிகள் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் மற்றும் மகளிர் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இவர்களுடன் தினமும் வேலைக்கும், பல்வேறு பணிகளுக்காகவும் நூற்றுக்கணக்கானனோர் கிருஷ்ணகிரி வருகின்றனர். இந்நிலையில் காலை 7.15 மணிக்கும், 8 மணிக்கும் என இரு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் 200 பேருடன், கிராம பகுதியில் இருந்து நகரத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்து சுமார் 500 பேர் இந்த இரண்டு டவுன் பஸ்களில் கடும் கூட்ட நெரிசலுடன் பயணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடியும், கூரை மீது அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் போது அடிக்கடி மாணவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இதுபோன்ற அவல நிலையில் கல்லூரிக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் நாங்கள் பெரும் அவதியடைந்து வருகிறோம். எனவே, மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக காலை 7.45 மணிக்கு ஒரு டவுன் பஸ்சை வேப்பனஹள்ளியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேங்க் ஆப்ரேட்டர்கள் மனு:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் பணிபுரிந்து வரும் 21 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் 7வது ஊதியக்குழு பட்டியலில் விடுபட்டுள்ளனர். இவர்களை பட்டியலில் இணைத்து, அதன்படி சம்பளம் வழங்க வேண்டும். நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். அரசாணை எண்.303ன்படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், 2013ல் பணி அமர்த்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணை எண்.348ன்படி பணிக்கொடை ரூ.50 ஆயிரம் மற்றும் ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், ஊத்தங்கரை ஒன்றியம் ஆறுமுகம், மகனூர்பட்டி ஊராட்சி ராஜா, மத்தூர் ஒன்றியம் கெரகபள்ளி ஊராட்சி செங்கையன் ஆகியோருக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு:  கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுர மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்களுக்கு சமத்துவபுரத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, அவரவர் பெயர்களில் பட்டா பதிவாகியுள்ளது. ஆனால் சமத்துவபுரத்தில் வசிக்கும் 100 குடும்பத்தினருக்கும் 13 ஆண்டுகள் ஆகியும், இடம் அளவீடு செய்து பட்டா வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு இடம் அளந்து வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் சமத்துவபுரத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படாததால் பல்வேறு பிரச்சனைகளை தினமும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இதே போல் தெருவிளக்குகளும் அடிக்கடி எரிவதில்லை. எனவே, இதுபோன்ற அடிப்படை பிரச்சனைகளையும் தீர்த்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government ,bus operating petition ,Vepanahalli-Krishnagiri ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்