×

திருவையாறு, பாபநாசம் பகுதி கொள்ளிடத்தில் தனி மணல் குவாரி அமைக்க வேண்டும்

தஞ்சை,அக்.16: திருவையாறு, பாபநாசம் தாலுகாவில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தனி மணல் குவாரி அமைக்க அனுமதிக்க வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால், துணை செயலாளர் அன்பு தலைமையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு அளித்தனர். அதில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் தாலுகாவில் மாட்டு வண்டியில் மணல் எடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீலத்தநல்லூரில் இயங்கி வந்த மணல் குவாரி மூடப்பட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுக்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாட்டு வண்டியில் மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கொள்ளிடம் ஆற்றில் திருப்புறம்பியம், அரையத்தமேடு, வாழ்க்கை, தேவன்குடி ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் குவாரி அமைத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டிணம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை  ஒருங்கிணைப்பாளர் அஸ்லம் தலைமையில் அளித்த மனு:அதிராம்பட்டிணம் கடைமடை பகுதியின் வறண்ட குளங்களுக்கு  தாமதமின்றி ஆற்று நீர் திறந்துவிட வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி  குடிநீர் தேவைக்காக தொக்காலிக்காடு மகாராஜா சமுத்திர அணைக்கட்டு  நீரோடையில் இருந்து வெளியேறும் உபரிநீரை பம்பிங் (இறைவை) மூலம்  அதிராம்பட்டினம் பகுதி ஊரணிகளுக்கு நிரப்பி கொள்ளும் திட்டத்தை விரைந்து  செயல்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் ஏரிப்புறக்கரை  கிராம கிழக்கு கடற்கரை சாலை சின்ன ஏரியில் துவங்கி பிலால் நகர், ஏரிப்புறக்கரை  கிராம சாலை வழியாக அதிராம்பட்டினம் கடற்கரை வரை உள்ள வடிகால் வாய்க்காலை  தூர் வாரி சீரமைக்க வேண்டும். அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே உள்ள  கடற்கரை தெரு குடியிருப்பு பகுதியில் புதிதாக கான்கிரீட் மூடியுடன் கூடிய  கழிவுநீர், மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு மாதமாக இயங்காத கம்ப்யூட்டர்: ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது வழக்கம். அப்போது பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து ஒவ்வொரு மனுவுக்கும் பதிவெண் கொடுக்கப்படும். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் மனுக்களை துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து மேல்நடவடிக்கை எடுக்கலாம்.

மேலும் இம்மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதிவு செய்யப்பட்டு அந்தந்த மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். ஆனால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக மனுக்கள் பதிவு செய்ய பயன்படும் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை. இதனால் பெறப்படும் மனுக்களுக்கு ஊழியர்களை கொண்டு கையால் எழுதப்பட்ட ஒப்புதல் ரசீது எழுதி தரப்படுகிறது. இதனால் மனுவை பதிவு செய்வதில் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் மனு மீது நடவடிக்கை இல்லையென்றால் மீண்டும் மனுவின் சாரம்சம் குறித்து அறிந்து கொள்ள இயலாது என்பதுடன் மனுதாரர் மீண்டும் மனு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சிஐடியூ துணை செயலாளர் அன்பு தெரிவித்தார். 333 கோரிக்கை மனுக்கள் தஞ்சை  கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்,  கல்விக்கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 333 மனுக்களை பொதுமக்கள்  வழங்கினர். பின்னர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். முன்னதாக பொது சுகாதாரம்  மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய அயோடின் சத்து  குறைபாடு மற்றும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த  ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் டிஆர்ஓ சக்திவேல், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், துணை இயக்குனர் சுகாதார பணிகள் ரவீந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Thiruvaiyaru ,sand quarry ,Papanasam ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா