×

பருவநிலை மாற்றத்தால் குறுவை நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்

கும்பகோணம்,அக்.16: கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் 20,000 ஏக்கரில் மின்மோட்டார் உதவியுடன் குறுவை நடவுப்பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆடுதுறை 36, 45, சாவித்திரி 1009 உள்ளிட்ட நெற்பயிர்களை விவசாயிகள் நடவு செய்தனர். இந்நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. தற்போது பகலில் கடுமையான வெயில் அடித்த போதும், அதிகாலையில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ேமலும் லேசான குளிர் காற்று அடித்ததால் பருவநிலை மாறி நெற்பயிரில் புகையான் நோய் தாக்கி வருகிறது. தற்போது குறுவை நெற்பயிர்கள் சூழ் பருவமான பால் பருவத்தில் இருக்கும் நிலையில் புகையான்  நோய் தாக்கினால் பதராகி வீணாகிவிடும்.

கும்பகோணம் அடுத்த மாத்தூர் கிராமத்தில் நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அனைத்தும் சூழ் பருவத்தில் இருந்தன. கடந்த சில நாட்கள் பெய்த மழையாலும், பகலில் வெயில், அதிகாலையில் பனி பெய்வதால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வீணாகி விட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறுவை நடவு செய்துள்ள விவசாயிகள், வயலில் உள்ள தண்ணீரை வடிகட்ட வேண்டும். அதன்பின் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பான் மூலம் தெளித்தால் தான் புகையான் நோய் தாக்குதலில் இருந்து குறுவை பயிரை காப்பாற்ற முடியும் என்று மூத்த விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே பருவநிலை மாறியதால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bourgeon ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...