×

குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை,அக்.16:குரு பெயர்ச்சியையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் 4 நாட்கள் நடந்த பரிகார ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கி பின் தோன்றின. ஆனால் அந்த பேரூழி காலத்திலும் அழியாத பெருமை உடையது தஞ்சை அடுத்துள்ள திட்டை குருஸ்தலமாகும். இந்த கோயிலில் கடந்த 4ம் தேதி குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி நடந்த குரு பெயர்ச்சியையொட்டி கடந்த 10ம் தேதி நடந்த ஏகதின லட்ச்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் தொடர்ந்து பரிகார ஹோமங்கள் வேத விற்பன்னர்கள் தலைமையில் நடந்தது.

வேறு வெளி இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கேற்பதை விட குருபகவான் சன்னதியில் நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் நற்பலன்களை தரும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். பரிகார ஹோமத்தில் பங்கேற்க நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனை மற்றும் ஹோமத்துக்கு கட்டணம் செலுத்தி தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை அனுப்பி வைத்தவர்களுக்கு அர்ச்சனை சங்கல்பம் செய்து தபால் மூலம் பிரசாதம், பூஜையில் வைத்த குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்பட்டன. குரு பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் முரளிதரன், நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Guru Darshan Devi ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா