×

பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 244 மனுக்கள் குவிந்தன

பெரம்பலூர்,அக்.16: பெரம்பலூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட் டத்தில் 244 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில்தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 244 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் நேரடியாக அளித்தனர். பொது மக்களிடமிருந்து கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரியபதிலை தருமாறு அறிவுறுத்தினார். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனிகவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

முன்னதாக, மாவட்ட வருவாய் அலகு மற்றும் பிற துறைகளிலிருந்து கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கக்கோரி வரப்பெற்றுள்ள முன் மொழிவுகளின் அடிப்படையில் காலஞ்சென்ற அரசு ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் பணிநியமனம் செய்யப்பட்ட 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித் துணை கலெக்டர் மனோகரன், மாவட்ட மகளிர் திட்டஇயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags : crowd meeting ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி