×

சத்துணவு பணியாளர்களுக்கு உணவூட்டு செலவினம் வழங்க கோரிக்கை

அரூர், அக்.16:  தர்மபுரி மாவட்டத்தில், சத்துணவு பணியாளர்களுக்கு உணவூட்டு செலவினத்தொகையை வழங்க ேவண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், சுமார் 1100 மையங்களில் ஒருங்கிணைப்பாளர், சமையலர் என சுமார் 3 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்க வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சத்துணவுக்கு என செயல்படும் தனி பிரிவு மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவு செலவின அறிக்கை தாக்கல் செய்த பின்னர், அடுத்த மாதம் அதற்கான பணம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன், திடீரென சத்துணவு மையத்தின் பெயரில் தனி கணக்கு தொடங்க உத்தரவிடப்பட்டது. மேலும் உணவூட்டு செலவினம் அந்த கணக்கில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 4 மாதங்களாக உணவூட்டு செலவினம் வழங்கப்படவில்லை. மைய பொறுப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் காய்கறி, விறகு, சிலிண்டர் என வாங்குகின்றனர். அவர்களது சம்பளமும் உரிய தேதியில் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. எனவே, உரிய தேதியில் பணியாளர்கள் கணக்கில் சம்பளத்தை வரவு வைப்பதுடன், நிலுவையில் உள்ள உணவூட்டு செலவினத்தையும் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : nutrition workers ,
× RELATED சிதம்பரம் மாவட்டத்தில் அரசுப்...