×

கன்னியாகுமரி - மகாபலிபுரம் இடையே படகு போக்குவரத்துக்கு ₹99 கோடி ஒதுக்கீடு பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

தக்கலை, அக்.16: கன்னியாகுமரியில் இருந்து மகாபலிபுரம் வரை படகு போக்கு வரத்து நடத்த 99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். குமரி மாவட்ட பாஜ சார்பில் மத்திய அரசின் நான்கரை ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தக்கலை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் தங்கப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் உண்ணி கிருஷ்ணன் வரவேற்றார். கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ்,  மாவட்டத் துணைத் தலைவர் குமரி ரமேஷ், பொருளாளர் உடையார் உள்ளிட்டவர்கள் பேசினர்.இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் மாவட்ட, மாநில சாலைகள் உள்பட ரூ. ஆயிரம் கோடி அளவில் சாலை பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது.  நான்கு வழிச்சாலை பணிகள் நான்காயிரம் கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இதில் பாலப்பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டத்தில் பல்வேறு பாலங்கள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. மார்த்தாண்டம்,  பார்வதிபுரம் ஆகிய மேம்பாலங்கள் 328 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கோட்டாறு முதல் மத்தியாஸ் வார்டு வரை 3 கி. மீட்டர் அளவிலும், ஒழுகினசேரி முதல் வடசேரி வழியாக கிருஷ்ணன் கோவில் வரை இரண்டு கிலோ மீட்டர் மேம்பாலங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளன. நம்முடைய திட்டங்கள் இ்ன்றைய தேவைக்கும், நாளைய தேவைக்கும் கணக்கிடக்கூடாது.  ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு என்ன தேவையோ அந்த வகையில் திட்டமிட வேண்டும். இந்த மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை திட்டம் தேவை. அப்போது தான் கூடுதல் ரயில்கள் இயக்க முடியும்.  இரட்டை ரயில் பாதை அமைக்க 50 சதவீதம் மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முதன்முறையாக மாநில அரசின் நிதி இல்லாமல் மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கி 4 ஆயிரம் கோடி அளவில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளது. அப்போது முழுவதும் மின்சார பாதை அமையும். நான்கு வழிச்சாலை என்பது ஒட்டு மொத்த மக்களின் எதிர்காலம் ஆகும். இந்த திட்டங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இனயத்தில் அமைய இருந்த வர்த்தக துறைமுகத்தை மாற்ற வேண்டும் என்றார்கள். தற்போது கன்னியாகுமரி அருகிலும் அமைக்க வேண்டாம் என கூறுகிறார்கள். பொய்யான தகவல்களை கூறி மீனவ சமுதாய மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மீன்பிடித் துறைமுகம் இங்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. 3 மீன்பிடி துறைமுகங்கள் பணிகள் நடந்து வருவது யாருக்காவது தெரியுமா? மக்கள் பயன்படக்கூடிய வர்த்தகத் துறைமுகம் வந்தே ஆகவேண்டும். அதற்காக தெருவில் இறங்கிப் போராடுவோம். அதற்காக யார் காலிலும் விழ தயார். விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்தார்கள். ஒரு சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக விமான நிலையம் அருகிலுள்ள மாவட்டத்தில் அமைவதற்கு 600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுலா அமைச்சர் அல்போன்ஸ் 20ம் தேதி குமரிக்கு வருகை தர உள்ளார்.  இது வளர்ச்சியின் காலம். கன்னியாகுமரியில் இருந்து மகாபலிபுரம் வரை படகு போக்குவரத்து செய்ய ரூ.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Mahabalipuram ,Kanyakumari ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...