×

தவறான ஆவணங்களோடு செயல்படும் மணத்தட்டை மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்

கரூர், அக்.16 :  தவறான ஆவணங்களோடு செயல்படும் மணத்தட்டை மணல் குவாரி இயங்க தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.  முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூர் மாவட்டம் மணத்தட்டையில் தற்போது மணல் குவாரி இயங்கி வருகிறது. இது மணப்பாறை கூட்டுகுடிநீர் திட்டம் 430மீ தூரத்தில் இருப்பதால் அனுமதித்தது சட்டவிரோதம். செல்லுபடியாகாது என மதுரை ஐகோர்ட் ஆணையர்குழு பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  மேலும் ராஜேந்திரம் மணல் கிடங்குக்கு அனுமதி கொடுக்கவில்லை என அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 9ம்தேதி நேரில் கலெக்டரிடம் மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை. சமூக சொத்து கொள்ளையடிப்பதை தடுத்துநிறுத்த, குளித்தலை, மணப்பாறை குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் 12ம்தேதி குவாரியை முற்றுகையிட சென்றவர்களை தடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். அப்போது பதில் ஏதும் கூறாமல் கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும் அவர்கள் பிணையில் விடமுடியாத பிரிவுகளில் 2 பெண்கள் உள்பட 14பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எவ்வித நிபந்தனையும் இன்றி அவர்களை விடுதலை செய்யவேண்டும். தவறான ஆவணங்களைக்காட்டி இயங்கும் மணத்தட்டை மணல்குவாரி இயங்க தடை விதிக்கவேண்டும். அனுமதியின்றி இயங்கும் மணல் கிடங்கை மூடவேண்டும். ஆட்சியாளர்களின் தவறான நோக்கத்திற்கு அதிகாரிகள் துணைபோவதை தடுத்துநிறுத்த வேண்டும். பொய்யான புகாரை அதாவது தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அளித்த பொதுப்பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரைக்காப்பாற்ற இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : quarry ,
× RELATED முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான...