×

குந்தாணிபாளையம் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்

கரூர், அக். 16: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் நத்தமேடு குந்தாணிபாளையம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் சிலர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: இப்பகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். குறிப்பிட்ட இடத்தில் வசித்து வந்த நிலையில், அந்த இடத்துக்கும் உரிமை கொண்டாடப்படுவதால் எங்களுக்கு குடியிருக்க இடமின்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எங்களின் நிலை அறிந்து வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். கரூர் லாலாப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகராஜ் என்பவர் வழங்கிய மனுவில், லாலாப்பேட்டை சிந்தலவாடி ஊராட்சி எல்லையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணராயபுரம் தாலுகாவை சேர்ந்த கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம், பிள்ளாபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், மாதத்திற்கு 10க்கும் மேற்பட்ட பிரசவம் நடைபெறுகிறது. மற்ற சுகாதார நிலையங்களை விட இங்குதான் அதிகளவு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த மருத்துவமனையில்  வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா குறிக்காரன்பட்டி பகுதியினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வழங்கிய மனுவில், குறிக்காரன்பட்டியில் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. ஆரம்ப பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையத்திலும் அதிகளவு குழந்தைகள் உள்ளனர். ஆனால், பள்ளியில் ஆவணங்களை பாதுகாக்க பீரோ போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், அருகில் உள்ள அங்கன்வாடி மையமும் சுற்றுச் சுவரின்றி உள்ளது. சாலையோரம் இரண்டுமே செயல்படுவதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, பள்ளிக்கும், அங்கன்வாடி மையத்திற்கும் சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். புலியூர் அடுத்த கொல்லபாளையம் தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவர் தனது 11வயது மகளுடன் வழங்கிய மனுவில்,எனது 11 வயது மகளின் இருதயம் இடம் மாறியுள்ளது. அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ரூ.3லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் நான் மட்டுமே கூலி தொழில் செய்து வருகிறேன். எந்தவித வசதியும் இல்லை. எனவே, அறுவை சிகிச்சை மேற்கொள்ள கருணை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Kundanipalayam ,
× RELATED க.பரமத்தி ஒன்றியம் குப்பம்...