×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலியான தொட்டியில் குடிநீர் நிரப்பப்படுமா?

கரூர், அக். 16: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் தாந்தோணிமலையில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை அளித்து வருகின்றனர். இதேபோல், மற்ற நாட்களிலும், ஆதார் உட்பட பல்வேறு சேவை பணிகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு முக்கிய தேவையான குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுட்டெரிக்கும் வெயில் வாட்டிய நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில், சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. தற்போது அந்த டேங்கில் துளி தண்ணீர் கூட வருவதில்லை. தற்போது வெயிலின் தாக்கம் குறைந்தாலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் மக்களுக்கு குடிநீர் தேவை அதிகமாக உள்ளது.

எனவே, இதனை கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் வசதி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கூட, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றனர். ஆனால், அலுவலக வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டேங்கில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளதால் குடிநீருக்காக ஏராளமான பொதுமக்கள் தேடி அலைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கண்காணித்து தண்ணீர் பிரச்னையை தீர்க்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : office ,Karoor Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...